Friday, July 30, 2010

வீணாக்குவதா வெற்றி ?

தற்போதைய கால கட்டத்தில் விலைவாசி உயர்வு என்பது நியாயப்படுத்த முடியாவிட்டாலும் தவிர்க்க முடியாததாகிறது. ஆள்பவர்களின் நிர்வாக திறமையின்மை, வாக்கு வங்கியை கவர இலவசம் என்ற பெயரில் கையாளும் மலிவான தந்திரங்கள் , கடன் சுமை உள்ளபோதும் மிகுந்த பொருட்செலவில் நடத்தப்படும் விழாக்கள் போன்ற காரணங்களினால் அளவில் சிறியதாக இருந்த பற்றாக்குறை (deficit) தற்பொழுது அசுர வளர்ச்சி பெற்று இருக்கிறது.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமக்கு தோன்றும் வழிகளில் எல்லாம் ஆடம்பர செலவுகளை செய்வதால் , அவற்றை ஈடு கட்ட வரிச்சுமை பொதுமக்களின் மீது விழுகிறது.

இவை அனைவருக்கும் எளிதில் புரிகின்ற உண்மை.

ஆனால் ஒரு அரசியல் கட்சியானது எதிர்கட்சி வரிசையில் அமரும்போது, விலை வாசி உயர்வை காரணமாக வைத்து BANDH எனப்படும் ஒரு மிகப் பெரிய நாடகத்தை அரங்கேற்றும். ஆளுங்கட்சியும் தமது பலத்தை நிரூபிக்க ஏதேனும் ஒரு பொது காரணத்திற்காக முழு வேலை நிறுத்தம் செய்யும்.

மக்களை சிந்திக்க வைக்கவே கூடாது என்ற முடிவிலிருக்கும் பெரும்பான்மையான பத்திரிகைகள் , முழு அடைப்பினை தாம் சார்ந்திருக்கும் கட்சியின் நிலைக்கேற்ப முழு வெற்றி என்றோ அல்லது பந்த் பிசுபிசுத்தது என்றோ பறை சாற்றும்.

சில கேள்விகள்

1.விலை வாசி உயர்வை எதிர்த்து செய்யப்பட்ட பந்த் முழு வெற்றி என்றால் ,அரசு ஏற்றிய விலையை இறக்கியதா ?

2. இலங்கை போரின்போது அரசு மேற்கொண்ட மனித சங்கிலி முழு வெற்றி என்றால் அதனால் போர் நின்றதா ?

ஒவ்வொரு கட்சியின் பலத்தை கொண்டே பந்தின் வெற்றி, தோல்விகள் நிர்ணயிக்கபடுகின்றன. மக்களின் முழு ஆதரவுடன் எந்த ஒரு கதவடைப்பும் நடைபெறுவதில்லை.

ஏன் என்றால்

௧. மக்களில் பெரும்பாலானோர் ஒரு நாள் பணி நிறுத்தம் செய்வதால் எந்த மாற்றமும் நடைபெறபோவதில்லை என்பதை நன்கு அறிவார்கள் .

௨. அன்றைய தினம் உழைத்தால் தான் வருமானம், உணவு என்ற நிலையில் அதிகப்படியானோர் உள்ளனர்.

ஆகையால் ஆளும் கட்சியோ , எதிர்கட்சியோ எவை பந்த் நடத்தினாலும் அவை மக்களுக்காக அல்ல. மக்களை வதைப்பதற் காகவே.

ஒரு daily labour வருமானத்தை பறிப்பதை பற்றி வருத்தப்படாதவர்கள் , தமது வருமானத்தற்கு எந்த குறைவுமின்றி பார்த்துகொள்கிரார்கள்.

கட்சியினரால் நடத்தப்படும் எந்த ஒரு தொலைக்காட்சியோ, தினப்பத்திரிகையோ பந்த் நடக்கும் நாளன்று தமது செயல்பாட்டை நிறுத்துவதில்லை. மாறாக "உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக" என்று புதிய படங்களை திரை இட்டு தமது வருமானத்தை இரட்டிப்பாக்குகின்றன.

அக்கட்சிகளை அண்டிப்பிழைக்கும் பத்திரிகைகளோ ,பந்த் வெற்றி என்றும், தோல்வி என்றும் certificate கொடுத்து மக்களின் கவனம் அவர்களின் அன்றைய இழப்பின் மீது செல்லாமல் பாதுகாக்கின்றன.

அண்ணல் காந்தியடிகள் தம்மை வருத்தி , பொது மக்களுக்கு தொந்தரவு இல்லாமல், நடத்தியவையே போராட்டங்கள்.

தமக்கு எந்த பொருள் இழப்பும் ஏற்படாமல் , பிறரின் வயிற்று பிழைப்பை பற்றி அக்கறை கொள்ளாமல் , தம்முடைய வளர்ச்சிகாக இந்த கட்சிகள் நடத்தும் பந்த், ஆர்பாட்டம் போன்றவை பகை நாட்டின் படை எடுப்பை விட கொடுமையானது.

செயல்படாத ஒன்றை செயல் பட வைத்தால் அது வெற்றி ஆகும்.

செயல்படும் ஒன்றை முடக்குவது எவ்வாறு வெற்றியாகும் ?

ஜன நாயகத்தின் தூண்களில் ஒன்றான பத்திரிகைகள் இவற்றை கிள்ளி எரியாமல் நீர் ஊற்றி வளர்க்கும் போது,

நாமும் ஒரு நாளை வீணாக்குவதுதான் வெற்றி என்று கொள்ள வேண்டுமோ ?

வினாவுடன்

முகுந்தன்