அய்யா ஐந்தமிழ் அறிஞரே,
தங்களின் சமீப கால அறிக்கைகள், தங்களின் தலைமகனின் பேட்டி முதலியவற்றினால் இந்த சிறு மடல்.
இந்து மதத்தின் பெரும் பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் பல்வேறு மடங்களைக் கொண்டிருக்கின்றது.
வைணவ மடங்களின் தலைமை பொறுப்பிற்கு வர சில தகுதிகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன .
1. கிருஹஸ்தாச்ரமம் எனப்படும் திருமண வாழ்க்கையை மேற்கொண்டிருக்கவேண்டும்
2.குறிப்பிட்ட மடத்தின் சீடராகவும், சம்பிரதாயங்கள் முழுதும் அறிந்திருந்து கடை பிடிப்பவராகவும் இருக்க வேண்டும்.
3.தற்போதய மடாதிபதிக்கு ரத்த சம்பந்தம் உள்ளவராக இருக்க கூடாது.
சைவ மடங்களில் மேற்கூறியவற்றில் திருமண வாழ்க்கையை தவிர்த்தவராக இருக்க வேண்டும். மற்ற நிபந்தனைகள் பொதுவானவை.
ஆனால்
ஜனநாயக இயக்கமான தங்கள் இயக்கத்தின் அடுத்த தலைவரை ,தங்களின் ரத்த சம்பந்தமானவரை , தற்போதய தலைவரான தாங்கள் தன்னிச்சையாக அடையாளம் காட்டியது ஏன்?
எந்த தகுதியும் , அர்ப்பணிப்பும் இல்லாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர் தங்களின் விருப்பம் ஒன்றின் பேரில் அரசு அமைப்பினில் உள்ளனர்.
எமது மடங்களால் ஒரு நெறியோடு பின்பற்றப்படும் வழிமுறையை, தங்களின் சுய லாபத்திற்காக பின்பற்றி உள்ளது ஏன்?.
எமது மடங்கள் எவையும் ரத்த சம்பந்தம் உள்ளவரை அடுத்த தலைவர் ஆக்குவதில்லை.
ஓரிரு தவறுகள் மடாதிபதிகளால் செய்யப்படும்போது சமுதாயம் அதை தட்டி கேட்டு திருத்துகிறது ( மதுரை ஆதீன விவகாரம்)
தங்களின் கட்சி விஷயங்களின் எந்த மடமும் தலையிடுவதில்லை.
தாங்களும் தங்களின் வாரிசுகளும் தயை கூர்ந்து தங்களின் உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப இத்தகைய மடங்களை மேற்கோள் காட்டாதீர்.
தங்களின் செய்தியை புறக்கணிக்கும் செய்திதாள்களுக்கு பூணல் மாட்டி அழகு பார்க்கிறீர்கள்.
அதுபோல பெரும்பான்மையான மக்களால் மகிழ்வுடன் கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, ஆயுத பூஜை போன்றவை தங்களின் தொல்லைகாட்சியால் விடுமுறை திருநாள் என புறக்கணிக்கப்படும்போது, தங்களுக்கு என்ன பட்டம் கொடுத்து அழகு பார்ப்பது ?
பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.
நான் பொதுவானவன் அல்ல, ஒரு குறிப்பிட்ட மதத்தின் விழாக்கள், வழிமுறைகள் எனக்கு ஏற்புடையவை அல்ல என தாங்கள் நினைத்தால் அதை பகிரங்கமாக வெளியிட துணிவு வேண்டும்.
தங்களால் முட்டாள்தனம், என கருதப்படும் விஷயங்களை பின்பற்றும் முட்டாள் சமூகத்தின் வாக்குகளை வேண்டாம் என ஒதுக்கும் துணிவு வேண்டும்.
ஊருக்கு நாத்திகம் போதிக்கும் நீங்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், வைத்திய வீரராகவரையும், மயிலை ஆதிகேசவரையும், சக்கரதாழ்வாரையும் நாடும் போது வாய் மூடி மௌனமாய் இருப்பது ஏன்?
பதில்கள் தங்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும்.
தங்களின் ஆற்றலை ஆக்கத்திற்கு பயன்படுத்துங்கள், அடுத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்த அல்ல.
வேண்டுகோளுடன்
முகுந்தன்